இந்தியாவில் சமீபகாலமாக ஒருபக்கம் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் நீதிமன்றங்களின் பெரும்பாலான தீர்ப்புகள் மக்களின் மனநிலையை ஒத்து அமைந்து சபாஷ் போட வைக்கிறது. ஒரு வகையில் இது கொஞ்சம் ஆபத்தான சமாச்சாரம் என்பது தனிக்கதை. நேற்றைய 2G spectrum வழக்கின் தீர்ப்பும் நீதித்துறையின் மேலுள்ள அதிகரித்திருக்கிற நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது. இந்த வழக்கின் போக்கை திசை திருப்ப நடந்த ஏகப்பட்ட முயற்சிகளுக்கு மத்தியிலும் இந்தளவுக்கு கடுமையான தீர்ப்பு வெளிவந்திருப்பது சமானியர்களை நிஜமாகவே ஆச்சரியப்படவைத்திருக்கிறது
இன்னொரு பக்கம் இப்படி ஏற்கனவே அளித்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து ஏலத்தில் விட்டால்/விடுவதால் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்து அது பொதுமக்களை குறிப்பாக அடித்தட்டு மக்களை நேரிடையாக பாதிக்கப்போகிறது என்கிற திசைதிருப்பலை ஒரு சாரார் மிகக்கவனமாக மேற்கொள்கிறார்கள்.. 2G ஸ்பெக்ட்ரமை பொறுத்தளவில் இலவசமாகவோ அல்லது ராசா பயன்படுத்திய First come First serve அடிப்படையில் குறைந்து விலையில் விற்பதுதான் சரி என்கிறார்கள். இணையத்திலேயே கூட நான் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் சிலர் இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஏலம் விடப்பட்ட 3G சேவையின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதை அவர்கள் காரணமாக தொடர்ச்சியாக முன்வைக்கிறார்கள்.
என்னைக்கேட்டால் உண்மையில் 3G சேவையைப்பற்றி இந்தியாவில் கொஞ்சம் ஓவர் ஹைப்படித்துவிட்டோம். 3Gயின் பயனாளர்கள், Video Calls & Data (Internet) சேவைகளை பயன்படுத்துவர்கள்தான். பெரும்பான்மையாக low cost basic mobileஐ பயன்படுத்தி Voice Communication (கொஞ்சம் விளையாட்டாக சொன்னால் Missed Call Services:) ) பயனாளர்கள் உள்ள நாட்டில் சமானியர்களுக்கு 3Gயின் தேவை ரொம்பக்குறைவே. இதை புரிந்துகொண்டதால்தான் தொலைபேசி சேவை நிறுவனங்கள் 3G சேவையில் Price warல் இறங்கி Customer Acquisition number gameல் இறங்கவில்லை. அதனாலயே Voice serviceல் நடந்த மாதிரி கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்படவில்லை. 3Gயின் தற்போதைய அல்லது அடுத்த ஓரிரு வருடங்களுக்கு பயன்படுத்தப்போகிறவர்களுக்கு கட்டண சலுகையை விட Value added Servicesன் மிகப்பெரிய தூண்டில் என்பதை தொலைபேசி சேவை நிறுவனங்கள் புரிந்து வைத்திருக்கின்றன. அதனாலயே 7Mbps, 14 Mbps, 21 Mbps என்பதில் தொடங்கி Mobile TV, Video Calls, Video On Demand serviceகள் என சேவைகளை அதிகரித்து வருமானத்திற்கு வருமானமும் ஆச்சு, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கூட்டினபடியும் ஆச்சு என சேவை நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுதான் 3G கொஞ்சம் Premiumஆக கட்டணம் நிர்ணயிக்க பட்டிருக்கும் காரணம். 3G அலைக்கற்றையையும் இலவசமாகவோ அல்லது சல்லிசான விலைக்கோ வழங்கியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.
ஆனால் 2Gயின் கதையோ வேறு. ஏற்கனவே சொன்னபடி அது பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சேவை. அங்கே Customer Acquisitionதான் முக்கிய நோக்கம். அதற்கு கட்டணங்களை குறைத்தால்தான் நடக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு நிமிஷத்திற்கு 8 ரூபாய் , 10 ரூபாயிலிருந்து ஒரு நொடிக்கு 1 பைசா, இரண்டு நொடிக்கு ஒரு பைசா என்கிற அளவுக்கு தரையிறங்கின. எதிர்பார்த்தபடியே பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்தது. உலக அளவிலேயே அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகளில் ஒன்றானது இந்தியா. இது 2009-10ன் வரையிலான கதை. கடந்த வருடத்திலேயே Customer acquisition consolidate ஆனதை உணர்ந்து இனியும் இந்த கட்டண குறைப்புகள் பெரிய அளவில் பயன்படப்போவதில்லை என்பதை புரிந்து மெல்ல மெல்ல 20 சதவீகிதம் வரை கட்டணங்களை உயர்த்தியிருக்கின்றன. இங்கே கட்டண உயர்வு என்பது ஏதோ பெட்ரோல் விலை உயர்வு மாதிரி ”இன்று நள்ளிரவு முதல் …” என்று அறிவித்து செய்கிற வேலையல்ல. மிகவும் சல்லிசாக வழங்கி வந்த திட்டங்களை மெல்ல மெல்ல நீக்குவது, சலுகைகளை குறைப்பது என பயன்பாட்டாளர்களுக்கு தெரியாமலேயே கட்டண உயர்வுகள் அமைந்துவிடுகிறது. இது ரொம்ப Cheapஆன tactic & சேவை விதிகளுக்கு புறம்பானது என்பது தனிக்கதை.
அதனால் இதுவரை கட்டணங்கள் மிகவும் குறைவாக இருந்ததற்கும், இனிமேல் கொஞ்சமாய் உங்களுக்கு தெரியாமலேக்கூட உயரப்போவதற்கும் ஸ்பெக்ட்ரம் ஏல முறையை பயன்படுத்துவதற்கும் முழுக்க சம்பந்தமில்லை. ஒரு வகையில் தற்போதைய தொலைபேசி கட்டணங்கள் அறிமுகக்கால சலுகைகள் மாதிரிதான். அதனால் இதே கட்டணங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. அதேவேளையில் கன்னாபின்னாவென்று கட்டண உயர்வு நடவடிக்கைகளிலும் சேவை நிறுவனங்கள் இறங்காது. இப்படியொரு பின்னணியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லையென கற்பூரமெற்றி சத்தியம் செய்பவர்கள் ராசா தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு (!!!) முறையற்ற வகையில் ஒதுக்கீடு செய்ததால்தான் இந்தியாவில் தொலைபேசி புரட்சியே நடந்து குப்பனும் சுப்பனும் வாழ்வாதரத்தை உயர்த்திக்கொண்டார்கள்; இப்போது ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டால் குப்பனும் சுப்பனும் பாதிப்பார்கள் என்னும் முழுப்பூசணிக்காய் சோறு gameஐ ஆட முயற்சிக்கிறார்கள். இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் 122 ஒதுக்கீடுகள் கூட 5% குறைவான பயன்பட்டாளர்கள் பயன்படுத்துவதே. அவர்களுக்கும் 4 மாதம் கால அவகாசமிருக்கிறது. மேலும் 122 ஒதுக்கீடுகள் பெற்ற நிறுவனங்கள் அந்தந்த Circleல் இருந்து ஒருவேளை சேவைகளை நிறுத்தினால் கூட ஒன்றும் Monopoly ஏற்பட்டு விடப்போவதில்லை. தேவையான Competition அனைத்து Circleகளிலும் பின்னரும் நீடிக்கும். மொத்தத்தில் இந்த 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ரத்தோ ஏலமுறையை அறிமுகப்படுத்துவதோ பயனர்களுக்கு கட்டண ரீதியில் எந்த பாதகமுமில்லை.
ஆனால் .. கடந்த 3+ ஆண்டுகளாக தொலைத்தொடர்புத்துறையில் நடைபெற்று வரும் குளறுபடிகளால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. எந்த பெரிய முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய காலகட்டத்தில் ஒரு முக்கிய துறையில் நடந்திருக்கும்/தொடரும் இந்த தேக்க நிலையால் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்திருக்கிறது. அதுதான் ரொம்ப சீரியஸான விஷயம். இதை யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லையென்பது மிகப்பெரிய சோகம். பின்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.




